விக்ரமாதித்யன் கவிதைகள்

தான் வாழ்ந்த நகரைப் பற்றி எழுதாத கவிஞனே இல்லை. விக்ரமாதித்யன் ஒரு கவிதையை, “ஊரென்றால் திருநெல்வேலி, அம்மை என்றால் காந்திமதி” என முடிக்கிறார். அவரது பல கவிதைகளில் திருநெல்வேலியும், தென்காசியும் வந்துக் கொண்டேயிருக்கிறது. நேரடியாக அவை வரவில்லையென்றால் காந்திமதி, நெல்லையப்பர்; விசுவநாதன், உலகம்மை என தெய்வங்கள் மூலம் அவரது ஊர் அவர் கவிதையில் நிலைப்பெற்றிருக்கிறது.

விக்கி அண்ணாச்சி கவிதைகளை வாசிக்கும் போது அவர் திருநெல்வேலி நிலம் முழுவதும் அலைந்து திரிந்து அந்நிலம் பற்றி பாடிய பாணன் மரபின் நவீன கவிஞர் என்றே சொல்ல தோன்றுகிறது.

கீழே உள்ள பாணதீர்த்தம் என்னும் கவிதை அம்மரபின் நீட்சி பாடலாக தான் நான் வாசித்தேன். ஆனால் இதனை ஏன் நவீன கவிஞனான விக்ரமாதித்யன் எழுத வேண்டும் என என்னுள் கேட்டுக் கொண்டேன். அந்த கேள்வியை வைத்துக் கொண்டு மீண்டும் கவிதையை வாசித்ததில் அது நவீன கவிதை தான் என அதன் இறுதி வரிகள் பதில் சொல்கிறது. இக்கவிதையை, “ஆறென்றால் அழகு, இயற்கையென்றால் ரகசியம்” என முடித்திருந்தால் அது மரபு கவிதையாக நின்றிருக்கும். 

ஆனால் அதற்கு மேலுள்ள “காவுவாங்கப் பார்த்துக்கொண்டிருக்கும்” என்னும் வரி இது நவீன கவிதை எனப் பிரித்துக் காட்டுகிறது.

- நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.

பாணதீர்த்தம்

தேக்கி வைத்ததில்

திறந்து விடுவது

திமிறிப்பாயும் வெண்புகைப்படலம்

அணைக்கட்டு 

ஏக

பெரிய ஏரி போல

இயந்திரப் படகேறி

இறங்கினால்

விழும் சப்தலயம்

மலைமேல் 

பாறைகளில்

மோதிச்சுழித்து உருண்டோடி வரும்


காலமற 

மனம் லேசாக

குழந்தை போலாக

 
காவுவாங்கப் பார்த்துக்கொண்டிருக்கும் 

ஆறென்றால் அழகு

இயற்கையென்றால் ரகசியம்

- விக்ரமாதித்யன்

***

தமிழில் கூத்து கலைஞனின் வாழ்க்கையை நான் அதிகமாக படித்தது இருவரிடத்தில். ஒருவர்  ஜெயமோகன், அவர் கொரோனா காலத்தில் எழுதிய நூறு கதைகளில் முக்கியமான கதை வனவாசம். அதற்கு முன்னரும் லிங்கா தகனம் போன்ற குறுநாவல் எழுதியுள்ளார். 

மற்றொருவர் பேரா. அ.கா.பெருமாள். அவர் கூத்து கலைஞனை, ஆட்டக் கலைஞன் என்றே சொல்ல வேண்டும் என்கிறார். சடங்கில் கரைந்த கலைகள் நூலில் தென் தமிழகத்தின் முக்கியமான நான்கு நிகழ்த்துக் கலையை தொகுத்துள்ளார்.

ஏனென்றால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி என்பது நிகழ்த்துக் கலையின் மாவட்டங்கள். கணியான் கூத்து, தோல் பாவை கூத்து, வில்லுப்பாட்டு, கண்ணன் பாட்டு, கரகாட்டம், அம்மன் பாட்டு என நீண்டு செல்லும் கூத்து மரபுகள் இங்கே உள்ளன.

விக்ரமாதித்யனின் “கூத்தாடி வாழ்க்கை” கவிதை ஜெயமோகனின் வனவாசம் சிறுகதைக்கு நிகரானது. அந்த ஆட்டக் கலைஞனின் வாழ்வில் நிகழும் ஒரு நாள் தித்திப்பை சுட்டி செல்வது. நிகழ்த்து கலை கலைஞர்கள் படும் அவமானங்கள், கஷ்டங்கள் எல்லாம் நான் பேரா.அ.கா.பெருமாள் சொல்லி கேட்டிருக்கிறேன்.

இந்த கவிதையும் அந்த அவலத்தை தான் சொல்கிறது. ஆனால் அந்த கூத்தாடியின் வாழ்க்கை வழியே கூத்தாடியின் மனதை தொட்டு கவிதை முடிகிறது. இன்றொரு நாள் மட்டும் இஷ்டத்துக்கு கொண்டாடும் மனதை தொடும் போதே அ.கா.பெருமாள் தொகுத்த கலைஞனின் வாழ்க்கை நிகழ்வில் இருந்து விலகி இது கவிதையாகிறது.

- நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.

***

கூத்தாடி வாழ்க்கை

இதோ

இன்னும் சிறிது நேரத்தில் விடிந்துவிடும்

இந்த

பவளக்கொடி கூத்து முடிந்துவிடும்

இவன்

அர்ச்சுனமகாராசாவேஷம் கலைந்து ஊர்திரும்பலாம்

இன்னும்

இரண்டு மூன்று நாளைக்குக் கவலையில்லை

குடிக்கூலி பாக்கி

கொடுத்துவிடலாம்

கொஞ்சம்

அரிசிவாங்கிப் போட்டுவிடலாம்

வீட்டுச் செலவுக்கும்

திட்டமாகத் தந்துவிடலாம்

பிள்ளைகளுக்கு

பண்டம் வாங்கிக்கொண்டு போகலாம்

சொர்க்கம் ஒயின்ஸில்

கடன் சொல்ல வேண்டாம்

இன்னொருநாள் இன்னொரு திருவிழாவில்

கூத்துப்போடும்வரை எதிர்பார்த்து

காத்திருக்கவேண்டிய மனசு

இஷ்டத்துக்கும் கொண்டாடும் இன்று .

- விக்ரமாதித்யன்

***

கவிஞர் விக்ரமாதித்யன் விக்கி பக்கம் 

விக்ரமாதித்யன் நூல்கள் வாங்க: விக்ரமாதித்யன் நூல்

Share:

இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள்

வியனுலகு வதியும் பெருமலர் தொகுப்பிலுள்ள இளங்கோ கிருஷ்ணனின் கவிதை - பயணம். 

இதில் மரணத்தை நோக்கிச் செல்லும் உடலின் பயணத்திற்கு ஒப்பாக கூறப்பட்டிருப்பது அடிவாரம் நோக்கிச் செல்லும் மலையில் உருட்டி விடப்பட்ட கல். உடலின் பயணம் டிக் டிக்கென நகரும் கடிகாரம் - அதன் வேகம் நமக்கு தெரியும். மலையில் விழும் கல் - அதன் வேகம் நாம் அறிவோம். 

இரண்டும் ஒன்றென ஆகும் அற்புதமே இந்தக் கவிதை. கவியும், புத்தனும் ஒரு தொன்மச் சிறப்பாக இந்தக் கவிதையில் மிளிர்கிறார்கள். டிக் டிக்கென நகன்று குழி நோக்கி செல்லும் உடல் எவ்வளவு பெரிய மலையில் இருந்து உருண்டு கொண்டிருக்கிறதோ?!

- மதார்

***

பயணம்

மரணத்துக்குக் கண்ணீர் உண்டு

கண்ணில்லை என்கிறான் கவி

மலையில் உருட்டிவிட்ட கல்

அடிவாரம் போய்ச் சேரும் தீவிரம்

கவனித்திருக்கிறாயா நண்ப

இந்த உடல் அவ்வளவு தீவிரமானது

மனம் எங்கு செல்கிறதென

பின் தொடர்கிறான் போதிச் சத்துவன்

காலம் எங்கு செல்கிறதென 

கவனித்துக் கொண்டிருக்கிறான் புத்தன் 

நாம் சொல்லலாம்

நான் இங்கு செல்கிறேன்

அங்கு செல்கிறேனென

நீ எங்கு சென்றாலும்

டிக் டிக் டிக்கென உடல்

குழி நோக்கி

சென்றுகொண்டே இருப்பதைப் பார்

- இளங்கோ கிருஷ்ணன்

***

'வெளிச்சத்தின் எடை 

வெப்பமாய் இருக்கிறது' 

என்கிற முதல் வரியிலேயே இந்தக் கவிதை திறக்க ஆரம்பித்து விடுகிறது. 'ஆழ்கடல் மீன் - மொத்தக் கடலையும் சுமந்தலைவது' கவிதையின் உச்சம். 

அன்றாடம் என் தெருவில் நடக்கும் பைத்தியக்காரனின் கோணியில் சுமையே இருக்காது. சுமை அவன் பாவனையில் இருக்கும். எனக்கு இந்தக் கவிதையில் வரும் பூவும், மீனும் அவனைத்தான் ஞாபகப்படுத்துகிறது. உண்மையில் அவன் கோணி சுமப்பதென்ன? 

பிரபஞ்சத்தின் பிரதிநிதியான காற்றாக இருக்குமோ?

இந்தக் கவிதையில் பாவனை பாவனையா? அல்லது அதைத் தாண்டியதா?

- மதார்

***

ஆழ்கடல் மீன்கள்

வெளிச்சத்தின் எடை

வெப்பமாய் இருக்கிறது 

விடிகாலையில்

மேற்புறக் கடலில் நீந்தும் மீன்கள்

வெளிச்சத்தை தொட்டுத் திறக்கின்றன

ஆழ்கடலின் குருட்டு மீன்கள் வெளிச்சத்தை உணர்வது 

இருட்டின் பாரமின்மையாலா பாரத்தாலா 

ஆழ்கடலின் ஒரு மீன்

மொத்தக் கடலையும் சுமந்து கொண்டிருப்பது

ஒரு பாவனையா

ஒரு பூ

மொத்த பிரபஞ்சத்தையும் சுமப்பது போல

- இளங்கோ கிருஷ்ணன்

***

வியனுலகு வதியும் பெருமலர் தொகுப்பு வாங்க


Share:

தேவதேவன் கவிதைகள்

நாம் நம் வாழ்வின் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண நினைத்து நாம் பெருக்கிக் கொள்வது அந்த பிரச்சனையை மட்டுமாக தான் இருக்கும். யோசித்து பார்த்தால் அவை எளிதில் கடந்து செல்லக் கூடியதாக இருக்கும். பெரும்பாலும் உப்புசப்பற்றது. ஆனால் மனம் அந்த பிரச்சனை என்னும் நெருப்பிற்கு நம்மையே அவிசாக்கிக் கொண்டிருக்கும்.

தேவதேவனின் கவிதைகள் ஒற்றை படிமத்தால் ஆனவை. அவரின் ஒரு கவிதையில், “மகிழ்ச்சியாக இருக்கிறது ஞாயிறுகிழமை மனத்துடன் முகங்களைப் பார்ப்பதற்கு” என எதையும் சுட்டாமல் அருவமான ஞாயிறுகிழமை மனத்தை மட்டும் சொல்லி அந்த கவிதை நம்முள் வளர செய்கிறார். 

அதே போல் தான் கீழுள்ள கவிதையும் நம்முள் தாகவெறியுடன் எரியும் நெருப்பிற்கு நாம் தேடிக் கொள்ள வேண்டியது தண்ணீரை தான் ஆனால் நாம் எப்போது அளிப்பது அவை உண்டு வளரும் நெய்களை தான்.

- நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.

***

 தாகவெறியுடன்

தாகவெறியுடன்

எரிகிறது நெருப்பு.

அதற்குத் தேவை தண்ணீர்

நாம் சொரிந்துகொண்டிருப்பதோ

வகை வகையான நெய்கள் !

- தேவதேவன்

***

பூங்கொத்தோடு என்ற கீழே உள்ள கவிதையும் மேலே சொன்னது போல் ஒரு காட்சி படிமத்தை மட்டும் நம்முள் சுட்டுக்காட்டுவது. அதனைச் சொல்லி கவிதையை நம் வாசிப்பில் வளர்த்தெடுக்கும் சவாலைக் கோருவது.

நான் வாசித்த போது, நாம் எப்போதும் மனிதர்களை எடைபோட்டுக் கொண்டேயிருக்கிறோம். பிற மனிதனை எடைப் போடாமல் நம்மால் வாழ முடிவதில்லை.

தேவதேவனின் இந்த கவிதையில் அப்படி நம் முன் வரும் பிற மனிதனின் கையில் பூங்கொத்தோடு அனுப்புகிறார். அந்த பூங்கொத்தோடு வந்தவனை மட்டும் நாம் பாராமல் அதன்பின் உள்ள வெளியையும் யோசித்துக் கொண்டேயிருக்கிறோம். இறுதியில் மறைத்து வைத்த வெளியையும் நமக்காக தானே கொண்டு வந்தான் அவன் என நம்மை வினவுகிறார்.

- நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.

***

பூங்கொத்தோடு

பூங்கொத்தோடு வந்தவனை

வாங்கி வரவேற்று

அமர்த்தி மகிழாமல்

வழியெல்லாம் அவர்களைச்

சீராட்டிக் கொண்டுவந்த

வெளியைக் கண்டு

பொறாமை கொண்டு என்ன பயன்?

அதையும் நமக்கே அளிக்கத்

தூக்கிக் கொண்டுதானே வந்து நிற்கிறான்

அவன்?

- தேவதேவன்

***

தேவதேவன் முழுத் தொகுப்பு வாங்க

Share:

இசை கவிதைகள்

நோய் வந்ததும் மனிதன் குழந்தையாகி விடுகிறான். நோய்மை ஒரு ஊஞ்சல். காய்ச்சலில் ஒருவன் எங்கு தலை வைத்து படுத்தாலும் அது தாயின் மடிதான் என்கிற இசையின் இந்த வரிகள் அசாதாரணமானவை. 'என்னைக் குணமாக்க நீ படுக்க வைத்தால் அதை நோய் என நான் இகழ மாட்டேன்' என்றார் தேவதேவன். 

இதிலும் இசை காய்ச்சலை சின்ன ஞானம் என்கிறார். காய்ச்சல் பாட்டு என்கிற இந்தக் கவிதை ஒரு தாலாட்டு தான். ஒரு மழை நேரத்தில் இந்தக் கவிதையை படித்தேன். மழைக்கு ஒதுங்குவது என்பது காய்ச்சலுக்கு பயப்படுதலே. இந்தக் கவிதை காய்ச்சலினூடாக  மழையையும் பேசுகிறது.

- மதார்

***

காய்ச்சல் என்பது

கொஞ்சமாக மரணிப்பது

இல்லாது போவதின் ஆசுவாசம்


காய்ச்சல் என்பது

சின்ன ஞானம் 

போதும் போதும் என்று

போர்வையைத் தவிர

யாவற்றையும் மறுப்பது


காய்ச்சல் வந்தவுடன்

அம்மா வந்துவிடுகிறாள்

இப்போது 

நீ எங்கு தலை வைத்தாலும்

அது

தாய்மடிதான்


அனத்துதல் என்பது காய்ச்சல் பாட்டு

அது காய்ச்சலைத் தாலாட்டுவது


தூரத்திலிருக்கும் இதயத்தை அழைக்க

ஆகச்சிறந்த பாட்டொன்று உண்டெனில்

அது காய்ச்சல் பாட்டுதான்.

- இசை

***

உயிர்மை - 200 ஆவது இதழில் வெளிவந்த இந்த கவிதை - "பூதத்தை விழுங்கியவள்". ஒத்திகைகளில் சிறப்பாக நடனம் ஆடும் சிறுமிக்கு நிகழ்ச்சியில் பயம் வந்து விடுகிறது. பார்வையாளர் வரிசையில் ஒரு பூதம் சிறுமியை தொந்தரவு செய்கிறது. பூதத்தை வெல்ல சிறுமி எடுக்கும் முடிவு இதில் அழகான கவிதையாகிறது. 

ஒரு நுட்பமான இடத்தில் கவிதை பறக்கிறது. சிறுமியும் நடனத்திலிருந்து ஜாலத்திற்கு மாறுகிறாள். ஒரு மேஜிக் நிபுணன் வெள்ளைக் காகிதத்திலிருந்து இதழ் இதழாக வண்ண மலர்களை உருவுவது போல இசை இந்தக் கவிதையை சாத்தியப்படுத்துகிறார்.

- மதார்

***

ஒத்திகையில் 

சுழன்று சுழன்று ஆடும் அவளுக்கு

நிகழ்ச்சியில் என்னவோ ஆகிவிடுகிறது


ஊணுறக்கம் துறந்தாள்

பயிற்சிகளைக் கடுமையாக்கினாள்.

தனிமையில் நொந்து நொந்து அழுதாள்.


தனக்குத்தானே எவ்வளவு புகட்டியும்

சரியான தருணத்தில்

அவளால் அதை அருந்தக் கூடவில்லை.


ஒத்திகைகளில் ஜொலிக்கும் அவளை

எப்போதும்

விழுங்கக் காத்திருந்தது

மேடைக்கு கீழே ஒரு பூதம்


இளஞ்செடியில் முதல் பூப் போல அவள் ஒரு 

முடிவெடுத்தாள்...

“இனி ஒத்திகைகளில் மட்டுமே ஆடுவது”


ஒத்திகையே நிகழ்ச்சி

என்றானபின்

அவள்

நடனத்திலிருந்து ஜாலத்திற்கு

பறக்கத் துவங்கினாள்.

- இசை

***

Share:

சபரிநாதன் கவிதைகள்

கவிதையில் அதிகம் பயின்று வந்த சொல் விடுதலை எனலாம். நவீன தமிழின் முதல் கவியின் பாட்டே விடுதலை என்னும் சொல்லில் இருந்து தான் தொடங்குகிறது.

அக விடுதலை என்றாலோ, புறவிடுதலை என்றாலோ அதனைப் பற்றி அத்தனை பேசிய பின்னும் கவிஞர்களுக்கு மட்டும் விடுதலையைப் பற்றி சொல்ல வார்த்தைகள் இருந்துக் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு கவிதையிலும் விடுதலை வெவ்வேறு படிமமாக வளர்கிறது.

பாரதி தன் கவிதையில் விடுதலையை வேட்கையாக்குகிறார். ஞானக்கூத்தன் பகடியாக்குகிறார். சபரிநாதனின் இந்த கவிதையில் விடுதலை என்பது வீடுபேறு மட்டுமல்ல அதற்கு மேல் சென்று ஒலிக்கும் வெண்கல மணிநாதமாக மாற்றுகிறார்.

- மதார்

***

விடுதலை

நல்லிரவு அண்மிக்க

நல்ல மழை வெளியே

மாசிலா நிர்வாணம் அணிந்து நனையும் செழும் பெண்ணென

முத்துத்தாரை தெறித்த மடல்கள் விரிந்து

மௌனம்.

யார் செய்குவதோ எங்கிருந்து வருகுவதோ வெண்கல மணிநாதம்

சட்டென்று உள்ளுள் ஓருணர்வு... விடுபட்டு விட்டதாய்

எதில் இருந்து, யாரிடம் இருந்து, நானறியேன்

உடல் தணிகிறது. இப்போது அதனால்

ஒரு தோட்டக் குடில் அளவிற்குப் பெரிதாக முடியும்.

அப்படியே எழும்பி நீந்த முடியும். ஆனால்

இது முடிய அதைக் கவ்வியிருந்தது எது?

சுற்றும் முற்றும் பார்க்கிறேன்

நல்ல மழை, வெண்கல மணிநாதம்.

- சபரிநாதன்

***

நம் வாழ்வில் பெரிய பெரிய வடுக்கள் எல்லாம் தடமில்லாமல் மறைந்து போகும் தன்மை கொண்டவையே. வரலாறு நெடுக அப்படி தான். வரலாற்றில் எத்தனை பெரிய வடுக்களுக்கும் இடமில்லை. மிஞ்சி போனால் சிறிய தழும்பு. அதற்கு மேல் அதனை நம் வாழ்வில் வளர்த்துக் கொள்ள விரும்புவதில்லை.

ஆனால் நம் வாழ்வில் ஒரு சிறு பிரச்சனை என்றால் அந்த பிரச்சனையின் காலங்களில் அவை பூதாகரமான ஒன்றாக பூதக்கண்ணாடி இட்டு நம்முன் நிக்கும். 

அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக அவதானித்து வந்தால் நமக்கு தெரியும் அவை ஒரு பெரும் கொப்பளத்தில் இருந்து சிறு புண்ணாக மாறி வடுவாகி மறைவதை. அவை மறைந்து சுவடின்றி ஆன பின்பும் அந்த காலம் ஆள்மனத்தின் ஓர் மூலையில் தேங்கியிருக்கும். நாம் வரலாறு என்று அந்த காலத்தையே தேக்கி வைத்திருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

சபரிநாதனின் முன்பனிக்காலம் 2015 அந்த மறைந்து தேங்குவதையே சுட்டி நிற்கிறது என எனக்கு இதனை வாசிக்கும் போது தோன்றியது.

- மதார்

***

முன்பனிக்காலம் 2015

சரிவின் பசுஞ்செறிவிடை உலுத்து நிற்கும் கைவிடப்பட்ட வீடு ஒன்று

காட்டின் பகுதியாவதைப் போல


அதன் உடைந்த ஓடுகளும் பெயர்ந்த கற்களும்

சிறிய பெரிய இலைநிழலில் இளைப்பாறும் நகப்பிறைகளாவதைப் போல


அங்குலவிய நினைவுகள்

இரவாடிகள் மட்டுமே அறியும் வாசனையாவதைப் போல 


அங்கு நடந்த கொலை

மண்ணடைத்துத் தூரந்த மலைச்சுனையாவதைப் போல


அதன் மொத்த கடந்த காலமும்

ஒரு நிலக்காட்சியாய் மாறுவதைப் போல


அதன் ரகசியங்கள் 

அந்நிலக்காட்சி  ஓவியத்தின் கித்தானைப் போல மறைவதைப் போல


ஒரு புண் ஆறுகிறது

இது முன்பனிக்காலம்

- சபரிநாதன்

***

Share:
Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive